4436
ஐயமுற் றேனைஇவ் வையங் கரியாக 

ஐயம் தவிர்த்தீரே வாரீர் 

மெய்யம் பலத்தீரே வாரீர் வாரீர்    
4437
ஐயர் நடம்புரி மெய்யர்என் றேஉணர்ந் 

தையர் தொழநின்றீர் வாரீர் 

துய்யர் உளநின்றீர் வாரீர் வாரீர்   
4438
ஐவணங் காட்டுநும் மெய்வணம் வேட்டுநின் 

றைவணர் ஏத்துவீர் வாரீர் 

பொய்வணம் போக்குவீர் வாரீர்  வாரீர்   
4439
ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும் 

ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர் 

நன்றேநின் றீர்இங்கு வாரீர்  வாரீர்   
4440
ஒப்பாரில் லீர்உமக் கிப்பாரில் பிள்ளைநான் 

ஒப்பாரி அல்லகாண் வாரீர் 

முப்பாழ் கடந்தீரே வாரீர்  வாரீர்