4461
வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர் 

வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர் 
மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர் 

மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர் 
கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர் 

கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர் 
ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்  
4462
இல்லாமை நீக்கிநின்றீர் ஆடவா ரீர் 

என்னைமண மாலையிட்டீர் ஆடவா ரீர் 
கொல்லாமை நெறிஎன்றீர் ஆடவா ரீர் 

குற்றமெலாங் குணங்கொண்டீர் ஆடவா ரீர் 
நல்லார்சொல் நல்லவரே ஆடவா ரீர் 

நற்றாயில் இனியவரே ஆடவா ரீர் 
எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்  
4463
ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர் 

ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர் 
ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர் 

உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர் 
காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர் 

கைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர் 
ஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்  
4464
சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர் 

சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர் 
கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர் 

கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர் 
சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர் 

சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர் 
என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்  
4465
அண்டமெலாம் கண்டவரே ஆடவா ரீர் 

அகண்டபரி பூரணரே ஆடவா ரீர் 
பண்டமெலாம் படைத்தவரே ஆடவா ரீர் 

பற்றொடுவீ டில்லவரே ஆடவா ரீர் 
கொண்டெனைவந் தாண்டவரே ஆடவா ரீர் 

கூத்தாட வல்லவரே ஆடவா ரீர் 
எண்தகுபொற் சபையுடையீர் ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்