4476
சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர் 

தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர் 
ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர் 

ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர் 
ஓதியுணர் வரியவரே அணையவா ரீர் 

உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர் 
ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர் அணையவா ரீர்   
4477
அன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர் 

அருட்சோதி வடிவினரே அணையவா ரீர் 
துன்பாட்டை ஒழித்தவரே அணையவா ரீர் 

துரியநிறை பெரியவரே அணையவா ரீர் 
பின்பாட்டுக் காலையிதே அணையவா ரீர் 

பிச்சேற்று கின்றவரே அணையவா ரீர் 
என்பாட்டை ஏற்றவரே அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்  அணையவா ரீர்   
4478
அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர் 

ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர் 
புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர் 

பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர் 
வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர் 

மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர் 
இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்  அணையவா ரீர்    
4479
கருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர் 

கண்மணியில் கலந்தவரே அணையவா ரீர் 
அருள்நிறைசிற் சபையவரே அணையவா ரீர் 

அன்பர்குறை தீர்த்தவரே அணையவா ரீர் 
தருணமிது விரைந்தென்னை அணையவா ரீர் 

சத்தியரே நித்தியரே அணையவா ரீர் 
இருள்நிறைந்தார்க் கறிவரியீர் அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்  அணையவா ரீர்   
4480
சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர் 

திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர் 
ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர் 

அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர் 
ஈரகத்தேன் அல்லஇங்கே அணையவா ரீர் 

என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர் 
ஏரகத்தே அமர்ந்தருள்வீர் அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்  அணையவா ரீர்