4491
எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர் 

எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார் 
மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை 

மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே என்ன  
4492
ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார் 

ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார் 
ஆதியந்தம் காண்பரிய ஸோதிசுயஞ் ஸோதிஉன்னோ 

டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே என்ன  
4493
அற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார் 

அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார் 
சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச் 

சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம் சொல்கின்றதே என்ன  
4494
ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற 

ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர் 
காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக் 

காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே என்ன  
4495
பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும் 

பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர் 
வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க 

வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே என்ன  
 என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான் 
என்ன புண்ணியம் செய்தே னோ --------------------------------------------------------------------------------

 இவர்க்கும் எனக்கும் 
சிந்து 
 பல்லவி