4541
மலையிலக் கான மருந்து - என்றன் 

மறைப்பைத் தவிர்த்தமெய் வாழ்க்கை மருந்து 
கலைநலம் காட்டு மருந்து - எங்கும் 

கண்ணாகிக் காணும் கனத்த மருந்து ஞான  
4542
அற்புத ஸோதி மருந்து - எல்லாம் 

ஆகியன் றாகி அமர்ந்த மருந்து 
தற்பதம் தந்த மருந்து - எங்கும் 

தானேதா னாகித் தனித்த மருந்து ஞான  
4543
தன்னை அளித்த மருந்து - என்றும் 

சாகாத நல்வரம் தந்த மருந்து 
பொன்னடி ஈந்த மருந்து - அருட் 

போனகம் தந்த புனித மருந்து ஞான  
4544
கண்ணுக் கினிய மருந்து - என்றன் 

கைப்பொரு ளாந்தங்கக் கட்டி மருந்து 
எண்ணுக் கடங்கா மருந்து - என்னை 

ஏதக்குழிவிட் டெடுத்த மருந்து ஞான  
4545
சுட்டப் படாத மருந்து - என்றன் 

தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து 
எட்டுதற் கொண்ணா மருந்து - நான் 

எட்டிப் பிடிக்க இசைந்த மருந்து ஞான