4546
உன்னற் கரிதா மருந்து - எனக் 

குள்ளும் புறத்தும் உலாவு மருந்து 
தன்னந் தனித்த மருந்து - சுத்தச் 

சாக்கிரா தீதச் சபேச மருந்து ஞான  
4547
ஒன்றில்ஒன் றான மருந்து - அந்த 

ஒன்றில் இரண்டாகி ஓங்கு மருந்து 
அன்றிமூன் றான மருந்து - நான் 

காகிஐந் தாகி அமர்ந்த மருந்து ஞான  
4548
வெளிக்குள் வெளியா மருந்து - எல்லா 

வெளியும் கடந்து விளங்கு மருந்து 
ஒளிக்குள் ஒளியா மருந்து - எல்லா 

ஒளியும்தா னாகிய உண்மை மருந்து ஞான  
4549
ஆறாறுக் கப்பால் மருந்து - அதற் 

கப்புறத் தீராறுக் கப்பால் மருந்து 
ஈறாதி இல்லா மருந்து - என்னை 

எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து ஞான  
4550
ஆரணத் தோங்கு மருந்து - அருள் 

ஆகம மாகிஅண் ணிக்கு மருந்து 
காரணம் காட்டு மருந்து - எல்லாம் 

கண்ட மருந்தென்னுள் கொண்ட மருந்து ஞான