4556
ஆதிஈ றில்லாமுற் ஸோதி - அரன் 

ஆதியர் தம்மை அளித்தபிற் ஸோதி 
ஓதி உணர்வரும் ஸோதி - எல்லா 

உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஸோதி சிவசிவ  
4557
மன்னிய பொன்வண்ண ஸோதி - சுக 

வண்ணத்த தாம்பெரு மாணிக்க ஸோதி 
துன்னிய வச்சிர ஸோதி - முத்து 

ஸோதி மரகத ஸோதியுள் ஸோதி சிவசிவ  
4558
பார்முதல் ஐந்துமாம் ஸோதி - ஐந்தில் 

பக்கமேல் கீழ்நடுப் பற்றிய ஸோதி 
ஓர்ஐம் பொறியுரு ஸோதி - பொறிக் 

குள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஸோதி சிவசிவ  
4559
ஐம்புல மும்தானாம் ஸோதி - புலத் 

தகத்தும் புறத்து மலர்ந்தொளிர் ஸோதி 
பொய்ம்மயல் போக்கும்உள் ஸோதி - மற்றைப் 

பொறிபுலன் உள்ளும் புறத்துமாம் ஸோதி சிவசிவ  
4560
மனமாதி எல்லாமாம் ஸோதி - அவை 

வாழ அகம்புறம் வாழ்கின்ற ஸோதி 
இனமான உள்ளக ஸோதி - சற்றும் 

ஏறா திறங்கா தியக்குமோர் ஸோதி சிவசிவ