4561
முக்குண மும்மூன்றாம் ஸோதி - அவை 

முன்பின் இயங்க முடுக்கிய ஸோதி 
எக்குணத் துள்ளுமாம் ஸோதி - குணம் 

எல்லாம் கடந்தே இலங்கிய ஸோதி சிவசிவ  
4562
பகுதிமூன் றாகிய ஸோதி - மூலப் 

பகுதிகள் மூன்றும் படைத்தருள் ஸோதி 
பகுதி பலவாக்கும் ஸோதி - சற்றும் 

விகுதிஒன் றின்றி விளக்கிய ஸோதி சிவசிவ  
4563
கால முதற்காட்டும் ஸோதி - கால 

காரணத் தப்பால் கடந்தொளிர் ஸோதி 
கோலம் பலவாகும் ஸோதி - ஒன்றும் 

குறிக்கப் படாச்சிற் குணப்பெருஞ் சோதி சிவசிவ  
4564
தத்துவம் எல்லாமாம் ஸோதி - அந்தத் 

தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஸோதி 
அத்துவி தப்பெருஞ் ஸோதி - எல்லாம் 

அருளில் விளங்க அமர்த்திய ஸோதி சிவசிவ  
4565
சத்தர்கள் எல்லாமாம் ஸோதி - அவர் 

சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஸோதி 
முத்தர் அனுபவ ஸோதி - பர 

முத்தியாம் ஸோதிமெய்ச் சித்தியாம் ஸோதி சிவசிவ