4591
மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும் 

விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான் 
செய்யென்று தந்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4592
என்பால் வருபவர்க் கின்றே - அருள் 

ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே() 
தென்பால் இருந்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  

 () ஈகின்றோம் ஈகின்றோம் ஈகின்றோம் என்றே - ச மு க 
4593
துரியத் தலமூன்றின் மேலே - சுத்த 

துரியப் பதியில் அதுஅத னாலே 
தெரியத் தெரிவது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4594
பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி 

பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே 
திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4595
தற்பர மேவடி வாகி - அது 

தன்னைக் கடந்து தனிஉரு வாகிச் 
சிற்பரத் துள்ளது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி