4596
நவவெளி நால்வகை யாதி - ஒரு 

நடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச் 
சிவவெளி யாம்இது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4597
மேருவெற் புச்சியின் பாலே - நின்று 

விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே 
சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4598
ஆரண வீதிக் கடையும் - சுத்த 

ஆகம வீதிகள் அந்தக் கடையும் 
சேர நடுக்கடை பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4599
பாடல் மறைகளோர் கோடி - அருட் 

பாத உருவ சொரூபங்கள் பாடி 
தேட இருந்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4600
நீடு சிவாகமங் கோடி - அருள் 

நேருறப் பாடியும் ஆடியும் ஓடித் 
தேட இருந்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி