4636
ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே 

அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே 
காராலும் கனலாலும் காற்றாலும் ககனக் 

கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ் 
பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப் 

படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே 
சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான 

சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே   
4637
ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே 

அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே 
ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய் 

உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே 
ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும் 

ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச் 
சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த 

சத்தியனே உண்கின்றேன்() சத்தியத்தௌ; ளமுதே   
 () உணர்கின்றேன் - ச மு க பதிப்பு   
4638
அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த 

அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே 
துச்சவுல காசாரத் துடுக்கனைத்தும் தவிர்த்தே 

சுத்தநெறி வழங்குவித்த சித்தசிகா மணியே 
உச்சநிலை நடுவிளங்கும் ஒருதலைமைப் பதியே 

உலகமெலாம் எடுத்திடினும் உலவாத நிதியே 
இச்சமயம் எழுந்தருளி இறவாத வரமும் 

எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே   
4639
அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே 

அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே 
துன்புடைய உலகரெலாம் சுகமுடையார் ஆகத் 

துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க 
இன்புடைய பேரருளிங் கெனைப்பொருள்செய் தளித்த 

என்அமுதே என்உறவே எனக்கினிய துணையே 
என்புடைநீ இருக்கின்றாய் உன்புடைநான் மகிழ்ந்தே 

இருக்கின்றேன் இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே   
4640
அடுக்கியபேர் அண்டம்எலாம் அணுக்கள்என விரித்த 

அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே 
நடுக்கியஎன் அச்சம்எலாம் தவிர்த்தருளி அழியா 

ஞானஅமு தளித்துலகில் நாட்டியபேர் அறிவே 
இடுக்கியகைப் பிள்ளைஎன இருந்தசிறி யேனுக் 

கெல்லாஞ்செய் வல்லசித்தி ஈந்தபெருந் தகையே 
முடுக்கியஅஞ் ஞானாந்த காரமெலாம் தவிர்த்து 

முத்தருளத் தேமுளைத்த சுத்தபரஞ் சுடரே