4641
ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே 

அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே 
ஓங்கார நிலைகாட்டி அதன்மேல்உற் றொளிரும் 

ஒருநிலையும் காட்டிஅப்பால் உயர்ந்ததனி நிலையில் 
பாங்காக ஏற்றி() எந்தப் பதத்தலைவ ராலும் 

படைக்கவொணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே 
தூங்காது பெருஞ்சுகமே சுகித்திடஇவ் வுலகைச் 

சுத்தசன்மார்க் கந்தனிலே வைத்தருள்க விரைந்தே   
 () ஏத்தி - முதற்பதிப்பு, பொ சு; பி இரா, ச மு க   
4642
ஆடகப்பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும் 

அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே 
ஏடகத்தே எழுதாத மறைகளெலாம் களித்தே 

என்உளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதியே 
பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும்சன் மார்க்கப் 

பயன்பெறநல் அருளளித்த பரம்பரனே மாயைக் 
காடகத்தை வளஞ்செறிந்த நாடகமாப் புரிந்த 

கருணையனே சிற்சபையில் கனிந்தநறுங் கனியே   
4643
அடியாதென் றறிந்துகொளற் கரும்பெரிய நிலையே 

அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே 
முடியாதென் றறிந்திடற்கு முடியாதென் றுணர்ந்தோர் 

மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே 
கடியாத பெருங்கருணைக் கருத்தேஎன் கருத்தில் 

கனிந்துகனிந் தினிக்கின்ற கனியேஎன் களிப்பே 
மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே 

மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கை இயற் பொருளே   
4644
அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே 

அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே 
மனந்தருவா தனைதவிர்த்தோர்() அறிவினில்ஓர் அறிவாய் 

வயங்குகின்ற குருவேஎன் வாட்டம்எலாம் தவிர்த்தே 
இனந்தழுவி என்னுளத்தே இருந்துயிரில் கலந்தென் 

எண்ணமெலாம் களித்தளித்த என்னுரிமைப் பதியே 
சினந்தவிர்ந்தெவ் வுலகமும்ஓர் சன்மார்க்கம் அடைந்தே 

சிறப்புறவைத் தருள்கின்ற சித்தசிகா மணியே   
 () தவிர்ந்தோர் - பி இரா பதிப்பு   
திருச்சிற்றம்பலம் 

டீயஉம--------------------------------------------------------------------------------


 சிவானந்தத் தழுந்தல் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4645
காரண காரியக் கல்விகள் எல்லாம் 

கற்பித்தென் னுள்ளே கலந்துகொண் டென்னை 
நாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றி 

நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப் 
பூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப் 

புத்தமு தாம்அருட் போனகம் தந்தே 
ஆரண வீதியில் ஆடச்செய் தீரே 

அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே