4646
தேகம்எப் போதும் சிதையாத வண்ணம் 

செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே 
போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப் 

போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி 
ஏகசி வானந்த வாழ்க்கையில் என்றும் 

இன்புற்று வாழும் இயல்பளித் தென்னை 
ஆகம வீதியில் ஆடச்செய் தீரே 

அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே   
4647
தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும் 

சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே 
தேனந்தத் தௌ;ளமு தூற்றிப் பெருக்கித் 

தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி 
வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா 

வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த 
ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே 

அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே   
4648
சிற்சபை இன்பத் திருநடங் காட்டித் 

தௌ;ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப் 
பொற்சபை தன்னில் பொருத்திஎல் லாம்செய் 

பூரண சித்திமெய்ப் போகமும் தந்தே 
தற்பர மாம்ஓர் சதானந்த நாட்டில் 

சத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த 
அற்புத வீதியில் ஆடச்செய் தீரே 

அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே   
4649
தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச் 

சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி 
ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா 

உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச் 
சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும் 

சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த 
அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே 

அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே   
4650
இத்தனை என்றுநின் றெண்ணிடல் ஒண்ணா 

என்பிழை யாவையும் அன்பினில் கொண்டே 
சத்திய மாம்சிவ சித்தியை என்பால் 

தந்தெனை யாவரும் வந்தனை செயவே 
நித்தியன் ஆக்கிமெய்ச் சுத்தசன் மார்க்க 

நீதியை ஓதிஓர் சுத்தபோ தாந்த 
அத்தனி வீதியில் ஆடச்செய் தீரே 

அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே