4666
மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன் 

இதயத்தே விளங்கு கின்ற 
துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத் 

தலைவனைச்சிற் சுகந்தந் தானைச் 
செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை 

ஒன்றான தெய்வம் தன்னை 
அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ 

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ   
4667
எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும் 

விளங்கவிளக் கிடுவான் தன்னைச் 
செப்பரிய பெரியஒரு சிவபதியைச் 

சிவகதியைச் சிவபோ கத்தைத்() 
துப்புரவு பெறஎனக்கே அருளமுதம் 

துணிந்தளித்த துணையை என்றன் 
அப்பனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ 

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ   
 () சிவபோகத்தே - முதற்பதிப்பு பொ சு பதிப்பு   
4668
பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த 

பெருந்தகைஎம் பெருமான் தன்னைச் 
செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப் 

பெருங்களிப்புச் செய்தான் தன்னை 
முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு 

கொடுத்தெனக்கு முன்னின் றானை 
அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ 

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ   
4669
பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம் 

பெரும்பொருளைப் புனிதம் தன்னை 
என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட 

பெருங்கருணை இயற்கை தன்னை 
இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும் 

பெருவாழ்வை என்னுள் ஓங்கும் 
அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ 

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ   
4670
இத்தனைஎன் றிடமுடியாச் சத்திஎலாம் 

உடையானை எல்லாம் வல்ல 
சித்தனைஎன் சிவபதியைத் தெய்வமெலாம் 

விரித்தடக்கும் தெய்வம் தன்னை 
எத்தனையும் என்பிழைகள் பொறுத்ததனிப் 

பெருந்தாயை என்னை ஈன்ற 
அத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ 

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ