4686
மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே 
சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம்வல்ல சித்தும்பெற்றேன் 
இனமிகும் சுத்தசன் மார்க்கப் பெருநெறி எய்திநின்றேன் 
கனமிகும் மன்றில் அருட்பெருஞ் சோதியைக் கண்டுகொண்டே   
4687
கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி 
கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் குவலயத்தே 
தொண்டே திருஅம் பலந்தனக் காக்கிச் சுகஅமுதம் 
உண்டேன் உயிர்தழைத் தோங்குகின் றேன்உள் உவப்புறவே   
4688
உறவே எனதின் னுயிரேஎன் உள்ளத்தில் உற்றினிக்கும் 
நறவே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு நடத்தரசே 
இறவேன் எனத்துணி வெய்திடச் செய்தனை என்னைஇனி 
மறவேல் அடிச்சிறி யேன்ஒரு போது மறக்கினுமே   
4689
மறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே 
இறப்பேன் இதுசத் தியம்சத் தியம்சத் தியம்இசைத்தேன் 
பிறப்பே தவிர்த்தெனை ஆட்கொண் டமுதம் பெரிதளித்த 
சிறப்பே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு செழுஞ்சுடரே   
4690
சுடரே அருட்பெருஞ் சோதிய னேபெண் சுகத்தைமிக்க 
விடரே எனினும் விடுவர்எந் தாய்நினை விட்டயல்ஒன் 
றடரேன் அரைக்கண மும்பிரிந் தாற்றலன் ஆணைகண்டாய் 
இடரே தவிர்த்தெனக் கெல்லா நலமும்இங் கீந்தவனே