4691
தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம் 
சிவநேய மும்தந்தென் உள்ளம் தெளியத் தெளித்தனையே 
நவநேய மன்றில் அருட்பெருஞ் சோதியை நாடிநின்ற 
இவனே அவன்எனக் கொள்வார்உன் அன்பர் இருநிலத்தே   
4692
நிலத்தே புழுத்த புழுவும் அலேன்புன் நிலத்திழிந்த 
மலத்தே புழுத்த புழுஅனை யேனைஅவ் வான்துதிக்கும் 
குலத்தே தலைமை கொடுத்தென் உளத்தில் குலவுகின்றாய் 
தலத்தே அருட்பெருஞ் சோதிஅப் பாஎன் தயாநிதியே   
4693
நிதியே என்னுள்ள நிறைவே பொதுவில் நிறைந்தசிவ 
பதியே அருட்பெருஞ் சோதிய னேஅம் பலம்விளங்கும் 
கதியே என்கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்துகொண்ட 
மதியே அமுத மழையேநின் பேரருள் வாழியவே  
4694
வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர் 
ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ 
டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய் 
வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே   
4695
மன்னிய நின்அருள் ஆரமு தம்தந்து வாழ்வித்துநான் 
உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே 
தன்னியல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய் 
துன்னிய நின்னருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே  
திருச்சிற்றம்பலம்
டீயஉம--------------------------------------------------------------------------------


 அடிமைப் பேறு 

நேரிசை வெண்பா