4696
அருள்அளித்தான் அன்பளித்தான் அம்பலத்தான் உண்மைப் 
பொருள்அளித்தான் என்னுட் புணர்ந்தான் - தெருள்அளித்தான் 
எச்சோ தனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான் 
அச்சோ எனக்கவன்போல் ஆர்   
4697
ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குணர்த்துகின்ற 
காரணமும் காரியமும் காட்டுவித்தான் - பூரணன்சிற் 
றம்பலத்தான் என்னாசை அப்பன் எலாம்வல்ல 
செம்பலத்தை என்உளத்தே சேர்த்து   
4698
சேர்த்தான் பதம்என் சிரத்தே திருவருட்கண் 
பார்த்தான்என் எண்ணமெலாம் பாலித்தான் - தீர்த்தான்என் 
துன்பமெலாம் தூக்கமெலாம் சூழாது நீக்கிவிட்டான் 
இன்பமெலாம் தந்தான் இசைந்து   
4699
இசைந்தான்என் உள்ளத் திருந்தான் எனையும் 
நசைந்தான்என் பாட்டை நயந்தான் - அசைந்தாடு 
மாயை மனம்அடக்கி வைத்தான் அருள்எனும்என் 
தாயைமகிழ் அம்பலவன் தான்   
4700
தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான் 
தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான் 
நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான 
வான்ஆனான் அம்பலத்தெம் மான்