4701
மான்முதலா உள்ள வழக்கெல்லாம் தீர்த்தருளித் 
தான்முதலாய் என்னுளமே சார்ந்தமர்ந்தான் - தேன்முதலாத் 
தித்திக்கும் பண்டமெலாம் சேர்த்தாங்கென் சிந்தைதனில் 
தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து  
4702
தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள் 
ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் - சார்ந்தேன்சிற் 
றம்பலத்தில் எல்லாம்வல் லானை அவன்அருளால் 
எம்பலத்தெல் லாம்வலன்ஆ னேன்   
4703
ஆனேன் அவனா அவன்அருளால் ஆங்காங்கு 
நானே களித்து நடிக்கின்றேன் - தானேஎன் 
தந்தைஎன்பால் வைத்த தயவைநினைக் குந்தோறும் 
சிந்தைவியக் கின்றேன் தெரிந்து  
4704
தெரிந்தேன் அருளால் சிவம்ஒன்றே என்று 
புரிந்தேன் சிவம்பலிக்கும் பூசை - விரிந்தமனச் 
சேட்டைஎலாம் தீர்த்துவிட்டேன் சித்தெல்லாம் வல்லஅருள் 
நாட்டைஎலாம் கைக்கொண்டேன் நான்  
4705
நான்செய்த நற்றவந்தான் யாதோ நவிற்றரிது 
வான்செய்த தேவரெலாம் வந்தேவல் - தான்செய்து 
தம்பலம்என் றேமதிக்கத் தான்வந்தென் னுட்கலந்தான் 
அம்பலவன் தன்அருளி னால்   
திருச்சிற்றம்பலம்
டீயஉம--------------------------------------------------------------------------------


 உலப்பில் இன்பம்

கலிவிருத்தம்