4716
சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித் 

தந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே 
உத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென் 

உடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் 
இத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும் 

ஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர் 
எத்தகை ஆயினும் செய்துகொள் கிற்பீர் 

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே  
4717
ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி 

ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே 
நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர் 

நாயக ரேஉமை நான்விட மாட்டேன் 
கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே 

கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம் 
ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ 

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே  
4718
அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை 

அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேநீர் 
சகத்தென்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் 

தனிப்பெருந் தேவரீர் திருச்சமு கத்தே 
உகத்தென() துடல்பொருள் ஆவியை நுமக்கே 

ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன் 
இகத்தன்றிப் பரத்தினும் எனக்கோர்பற் றிலைகாண் 

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே  
 () உகத்து - உகந்து என்பதன் வலித்தல் விகாரம் - முதற்பதிப்பு   
4719
தப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே 

சாற்றிட மாட்டேன்நான் சத்தியம் சொன்னேன் 
செப்படி வித்தைசெய் சித்தர்என் றோதும் 

தேவரீர் வல்லபத் திருச்சமு கத்தே 
இப்படி வான்முதல் எங்கணும் அறிய 

என்னுடல் ஆதியை ஈந்தனன் உமக்கே 
எப்படி ஆயினும் செய்துகொள் கிற்பீர் 

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே  
4720
தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும் 

தப்புரை ஈதன்று சத்தியம் சொன்னேன் 
கருணைப் பெருக்கினில் கலந்தென துள்ளே 

கனவினும் நனவினும் களிப்பருள் கின்றீர் 
வருணப் பொதுவிலும் மாசமு கத்தென் 

வண்பொரு ளாதியை நண்பொடு கொடுத்தேன் 
இருள்நச் சறுத்தமு தந்தர வல்லீர் 

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே