4731
உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ் 

வுலகிலே உயிர்பெற்று மீட்டும் 
நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான 

நாட்டமும் கற்பகோ டியினும் 
வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே 

வழங்கிடப் பெற்றனன் மரண 
பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும் 

பண்ணிய தவம்பலித் ததுவே  
4732
நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி 

நாதனை என்உளே கண்டு 
கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம் 

கூடிடக் குலவிஇன் புருவாய் 
ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான் 

அம்பலம் தன்னையே குறித்துப் 
பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும் 

பண்ணிய தவம்பலித் ததுவே  
4733
துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர் 

சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள் 
விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார் 

விழித்திருந் திடவும்நோ வாமே 
மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க 

மன்றிலே வயங்கிய தலைமைப் 
பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும் 

பண்ணிய தவம்பலித் ததுவே  
4734
புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம் 

புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே 
கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து 

கருத்தொடு வாழவும் கருத்தில் 
துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம் 

துலங்கவும் திருவருட் சோதிப் 
பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும் 

பண்ணிய தவம்பலித் ததுவே  
4735
வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க 

வெம்மையே நீங்கிட விமல 
வாதமே வழங்க வானமே முழங்க 

வையமே உய்யஓர் பரம 
நாதமே தொனிக்க ஞானமே வடிவாய் 

நன்மணி மன்றிலே நடிக்கும் 
பாதமே பிடித்தேன் எனக்கிது போதும் 

பண்ணிய தவம்பலித் ததுவே