4741
தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த் 
தேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய் 
வாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற 
தூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே   
4742
ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப 
நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும் 
சோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில் 
சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே  
4743
தன்னே ரிலாத தலைவாசிற் றம்பலம் தன்னில்என்னை 
இன்னே அடைகுவித் தின்பருள் வாய்இது வேதருணம் 
அன்னே எனைப்பெற்ற அப்பாஎன் றுன்னை அடிக்கடிக்கே 
சொன்னேன்முன் சொல்லுகின் றேன்பிற ஏதுந் துணிந்திலனே  
4744
தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே 
மோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன் 
நாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும் 
சாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே  
4745
கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி 
உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம் 
பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப் 
பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே