4746
தீமைகள் யாவும் தொலைத்துவிட் டேன்இத் தினந்தொடங்கிச் 
சேமநல் இன்பச் செயலே விளங்கமெய்ச் சித்திஎலாம் 
காமமுற் றென்னைக் கலந்துகொண் டாடக் கருணைநடத் 
தாமன்என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே   
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 இறை எளிமையை வியத்தல் 


எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம் 
4747
படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான் 

பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன் 
விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர் 

மெய்ம்மைஇது நும்மாணை விளம்பினன்நும் அடியேன் 
கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன் 

கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால் 
நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன் 

நல்லதிரு வருளாலே நான்தான்ஆ னேனே   
4748
சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர் 

தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர் 
மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா 

வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர் 
போகாத புனலாலே சுத்தஉடம் பினராம் 

புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர் 
நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர் 

நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே   
4749
வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும் 

மெய்ந்நிலையும் காட்டுவித்தீர் விளங்கியசித் தாந்தப் 
போதாந்த நிலையும்அப்பால் புகல்அரிதாம் பெரிய 

பொருள்நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது 
பாதாந்தம் அறிவித்தீர் சுத்தவடி வுடனே 

பகர்பிரண வாகாரப் பரிசும்எனக் களித்தீர் 
நாதாந்தத் தனிச்செங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர் 

நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே   
4750
ஆர்நீஎன் றெதிர்வினவில் விடைகொடுக்கத் தெரியா 

அறிவிலியேன் பொருட்டாக அன்றுவந்தென் தனக்கே 
ஏர்நீடும் பெரும்பொருள்ஒன் றீந்துமகிழ்ந் தாண்டீர் 

இன்றும்வலிந் தெளியேன்பால் எய்திஒளி ஓங்கப் 
பார்நீடத் திருவருளாம் பெருஞ்சோதி அளித்தீர் 

பகரும்எலாம் வல்லசித்திப் பண்புறவும் செய்தீர் 
நார்நீட நான்தானாய் நடம்புரிகின் றீரே 

நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே