4751
பாயிரமா மறைகளெலாம் பாடுகின்ற பாட்டுன் 

பாட்டேஎன் றறிந்துகொண்டேன் பரம்பொருள்உன் பெருமை 
ஆயிரம்ஆ யிரங்கோடி நாஉடையோர் எனினும் 

அணுத்துணையும் புகல்அரிதேல் அந்தோஇச் சிறியேன் 
வாய்இரங்கா வகைபுகலத் துணிந்தேன்என் னுடைய 

மனத்தாசை ஒருகடலோ எழுகடலில் பெரிதே 
சேய்இரங்கா முனம்எடுத்தே அணைத்திடுந்தாய் அனையாய் 

திருச்சிற்றம் பலம்விளங்கும் சிவஞான குருவே  
4752
ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன் 

உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய் 
வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும் 

வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ 
கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல் 

கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை 
நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன் 

நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே  
4753
கண்ணுடையீர் பெருங்கருணைக் கடலுடையீர் எனது 

கணக்கறிந்தீர் வழக்கறிந்தீர் களித்துவந்தன் றுரைத்தீர் 
எண்ணுடையார் எழுத்துடையார் எல்லாரும் போற்ற 

என்னிதய மலர்மிசைநின் றெழுந்தருளி வாமப் 
பெண்ணுடைய மனங்களிக்கப் பேருலகம் களிக்கப் 

பெத்தருமுத் தருமகிழப் பத்தரெலாம் பரவ 
விண்ணுடைய அருட்ஸோதி விளையாடல் புரிய 

வேண்டும்என்றேன் என்பதன்முன் விரைந்திசைந்தீர் அதற்கே  
4754
பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர் 

புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர் 
சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய 

தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும் 
எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும் 

இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே 
இதுதருணம் என்றேன்நான் என்பதன்முன் கொடுத்தீர் 

என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே   
4755
கரும்பின்மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர் 

கண்ணனையீர் கனகசபை கருதியசிற் சபைமுன் 
துரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன் 

துயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை 
விரும்புறஆ யிற்றிதுதான் தருணம்இந்தத் தருணம் 

விரைந்தருள வேண்டுமென விளம்பிநின்றேன் அடியேன் 
பெரும்பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள் 

பெரிதளித்தீர் அருட்பெருமை பெற்றவளில் பெரிதே