4771
உன்னுகின்ற தோறுமென துள்ளம் உருகுகின்ற 
தென்னுரைப்பேன் என்னுரைப்பேன் எந்தாயே - துன்னிநின்று 
தூக்கம் தவிர்த்தென்னைத் தூக்கிஎடுத் தன்பொடுமேல் 
ஆக்கமுற வைத்தாய் அது   
4772
நான்படுத்த பாய்அருகில் நண்ணி எனைத்தூக்கி 
ஊன்படுத்த தேகம் ஒளிவிளங்கத் - தான்பதித்த 
மேலிடத்தே வைத்தனைநான் வெம்மைஎலாம் தீர்ந்தேன்நின் 
காலிடத்தே வாழ்கின்றேன் காண்  
4773
புண்ணியந்தான் யாது புரிந்தேனோ நானறியேன் 
பண்ணியதுன் போடே படுத்திருந்தேன் - நண்ணிஎனைத் 
தூக்கி எடுத்தெனது துன்பமெலாந் தீர்த்தருளி 
ஆக்கியிடென் றேயருள்தந் தாய்  
4774
அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கொருசார் 
பஞ்சின் உழந்தே படுத்தயர்ந்தேன் - விஞ்சிஅங்கு 
வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தமுது 
தந்தாய்என் நான்செய் தவம்   
4775
நானே தவம்புரிந்தேன் நானே களிப்படைந்தேன் 
தேனே எனும்அமுதம் தேக்கஉண்டேன் - ஊனே 
ஒளிவிளங்கப் பெற்றேன் உடையான் எனைத்தான் 
அளிவிளங்கத் தூக்கிஅணைத் தான்