4776
வாழி எனைத்தூக்கி வைத்த கரதலங்கள் 
வாழி எலாம்வல்ல மணிமன்றம் - வாழிநடம் 
வாழி அருட்சோதி வாழிநட ராயன் 
வாழி சிவஞான வழி   
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 அருட்கொடைப் புகழ்ச்சி

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4777
கடையேன் புரிந்த குற்றமெலாம் 

கருதா தென்னுட் கலந்துகொண்டு 
தடையே முழுதும் தவிர்த்தருளித் 

தனித்த ஞான அமுதளித்துப் 
புடையே இருத்தி அருட்சித்திப் 

பூவை தனையும் புணர்த்திஅருட் 
கொடையே கொடுத்தாய் நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
4778
கடுத்த மனத்தை அடக்கிஒரு 

கணமும் இருக்க மாட்டாதே 
படுத்த சிறியேன் குற்றமெலாம் 

பொறுத்தென் அறிவைப் பலநாளும் 
தடுத்த தடையைத் தவிர்த்தென்றும் 

சாகா நலஞ்செய் தனிஅமுதம் 
கொடுத்த குருவே நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
4779
மருவும் உலகம் மதித்திடவே 

மரண பயந்தீர்த் தெழில்உறுநல் 
உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த 

உணர்வும் என்றும் உலவாத 
திருவும் பரம சித்திஎனும் 

சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர் 
குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
4780
சேட்டித் துலகச் சிறுநடையில் 

பல்கால் புகுந்து திரிந்துமயல் 
நீட்டித் தலைந்த மனத்தைஒரு 

நிமிடத் தடக்கிச் சன்மார்க்கக் 
கோட்டிக் கியன்ற குணங்களெலாம் 

கூடப் புரிந்து மெய்ந்நிலையைக் 
காட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே