4786
புலையைத் தவிர்த்தென் குற்றமெலாம் 

பொறுத்து ஞான பூரணமா 
நிலையைத் தெரித்துச் சன்மார்க்க 

நீதிப் பொதுவில் நிருத்தமிடும் 
மலையைக் காட்டி அதனடியில் 

வயங்க இருத்திச் சாகாத 
கலையைக் கொடுத்தாய் நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
4787
அருணா டறியா மனக்குரங்கை 

அடக்கத் தெரியா ததனொடுசேர்ந் 
திருணா டனைத்தும் சுழன்றுசுழன் 

றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ 
தெருணா டுலகில் மரணம்உறாத் 

திறந்தந் தழியாத் திருஅளித்த 
கருணா நிதியே நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
4788
மண்ணுள் மயங்கிச் சுழன்றோடு 

மனத்தை அடக்கத் தெரியாதே 
பெண்ணுள் மயலைப் பெருங்கடல்போல் 

பெருக்கித் திரிந்தேன் பேயேனை 
விண்ணுள் மணிபோன் றருட்சோதி 

விளைவித் தாண்ட என்னுடைய 
கண்ணுள் மணியே நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
4789
புலந்த மனத்தை அடக்கிஒரு 

போது நினைக்க மாட்டாதே 
அலந்த சிறியேன் பிழைபொறுத்தே 

அருளா ரமுதம் அளித்திங்கே 
உலந்த உடம்பை அழியாத 

உடம்பாப் புரிந்தென் உயிரினுளே 
கலந்த பதியே நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
4790
தனியே கிடந்து மனங்கலங்கித் 

தளர்ந்து தளர்ந்து சகத்தினிடை 
இனியே துறுமோ என்செய்வேன் 

எந்தாய் எனது பிழைகுறித்து 
முனியேல் எனநான் மொழிவதற்கு 

முன்னே கருணை அமுதளித்த 
கனியே கரும்பே நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே