4791
பெண்ணே பொருளே எனச்சுழன்ற 

பேதை மனத்தால் பெரிதுழன்று 
புண்ணே எனும்இப் புலைஉடம்பில் 

புகுந்து திரிந்த புலையேற்குத் 
தண்ணேர் மதியின் அமுதளித்துச் 

சாகா வரந்தந் தாட்கொண்ட 
கண்ணே மணியே நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
4792
பொருத்திக் கொடுத்த புலைஉடம்பில் 

புகுந்தேன் புணைத்தற் கிணங்காத 
எருத்தில் திரிந்தேன் செய்பிழையை 

எண்ணா தந்தோ எனைமுற்றும் 
திருத்திப் புனித அமுதளித்துச் 

சித்தி நிலைமேல் சேர்வித்தென் 
கருத்தில் கலந்தோய் நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
4793
பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில் 

பேய்போல் சுழன்ற பேதைமனத் 
தெண்ணுக் கிசைந்து துயர்க்கடலாழ்ந் 

திருந்தேன் தன்னை எடுத்தருளி 
விண்ணுக் கிசைந்த கதிர்போல்என் 

விவேகத் திசைந்து மேலும்என்தன் 
கண்ணுக் கிசைந்தோய் நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
4794
மாட்சி அளிக்கும் சன்மார்க்க 

மரபில் மனத்தைச் செலுத்துதற்கோர் 
சூழ்ச்சி அறியா துழன்றேனைச் 

சூழ்ச்சி அறிவித் தருளரசின் 
ஆட்சி அடைவித் தருட்சோதி 

அமுதம் அளித்தே ஆனந்தக் 
காட்சி கொடுத்தாய் நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
4795
பொய்யிற் கிடைத்த மனம்போன 

போக்கில் சுழன்றே பொய்உலகில் 
வெய்யிற் கிடைத்த புழுப்போல 

வெதும்பிக் கிடந்த வெறியேற்கு 
மெய்யிற் கிடைத்தே சித்திஎலாம் 

விளைவித் திடுமா மணியாய்என் 
கையிற் கிடைத்தோய் நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே