4801
முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னிமகிழ்ந் தெனக்களித்தாய் 
புத்தமுதம் உண்ணுவித்தோர் பொன்னணிஎன் கரத்தணிந்தாய் 
சித்தர்எனும் நின்னடியார் திருச்சபையில் நடுஇருத்திச் 
சித்துருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்   
4802
ஐந்தொழில்நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய் 
வெந்தொழில்தீர்ந் தோங்கியநின் மெய்யடியார் சபைநடுவே 
எந்தைஉனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச் 
செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்   
4803
நான்முகன்நா ரணன்முதலாம் ஐவர்தொழில் நயந்தளித்தாய் 
மேன்மைபெறும் அருட்சோதித் திருவமுதும் வியந்தளித்தாய் 
பான்மையுறு நின்னடியார் சபைநடுவே பதித்தருளித் 
தேன்மையொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்   
4804
நாயெனவே திரிந்தேனை வலிந்தழைத்து நான்முகன்மால் 
தூயபெருந் தேவர்செயும் தொழில்புரியென் றமுதளித்தாய் 
நாயகநின் னடியர்சபை நடுவிருக்க வைத்தருளிச் 
சேயெனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்  
4805
புல்வழங்கு புழுஅதனில் சிறியேனைப் புணர்ந்தருளிச் 
சொல்வழங்கு தொழில்ஐந்தும் துணிந்துகொடுத் தமுதளித்தாய் 
கல்விபெறு நின்னடியர் கழகநடு வைத்தென்னைச் 
செல்வமொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்