4806
தெருமனைதோ றலைந்தேனை அலையாமே சேர்த்தருளி 
அருளொளியால் ஐந்தொழிலும் செயப்பணித்தே அமுதளித்து 
மருவியநின் மெய்யடியார் சபைநடுவே வைத்தழியாத் 
திருவளித்து வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்   
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 அனுபவ சித்தி 

கட்டளைக் கலித்துறை 
4807
அப்பா எனக்கெய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே 
இப்பாரில் என்தன்னை நீயே வருவித் திசைவுடனே 
தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்துலகில் 
வெப்பா னதுதவிர்த் தைந்தொழில் செய்ய விதித்தனையே   
4808
விதித்தனை என்னைநின் தன்மக னாக விதித்துளத்தே 
பதித்தனை என்னுட் பதிந்தனை சிற்றம் பலநடமும் 
உதித்தொளிர் பொன்னம் பலநட மும்ஒருங் கேஎனக்கே 
கதித்தழி யாமையும் இன்பமும் கைவரக் காட்டினையே   
4809
காட்டினை ஞான அமுதளித் தாய்நற் கனகசபை 
ஆட்டினை என்பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்றுவந்து 
நீட்டினை என்றும் அழியா வரந்தந்து நின்சபையில் 
கூட்டினை நான்முனம் செய்தவம் யாதது கூறுகவே   
4810
கூறுகந் தாய்சிவ காமக் கொடியைக் கொடியில்வெள்ளை 
ஏறுகந் தாய்என்னை ஈன்றுகந் தாய்மெய் இலங்குதிரு 
நீறுகந் தாய்உல கெல்லாம் தழைக்க நிமிர்சடைமேல் 
ஆறுகந் தாய்மன்றில் ஆட்டுகந் தாய்என்னை ஆண்டவனே