4811
ஆண்டவ னேதிரு அம்பலத் தேஅரு ளால்இயற்றும் 
தாண்டவ னேஎனைத் தந்தவ னேமுற்றுந் தந்தவனே 
நீண்டவ னேஉயிர்க் கெல்லாம் பொதுவினில் நின்றவனே 
வேண்ட அனேக வரங்கொடுத் தாட்கொண்ட மேலவனே   
4812
மேலவ னேதிரு அம்பலத் தாடல் விளக்கும்மலர்க் 
காலவ னேகனல் கையவ னேநுதற் கண்ணவனே 
மாலவன் ஏத்தும் சிவகாம சுந்தர வல்லியைஓர் 
பாலவ னேஎனைப் பாலகன் ஆக்கிய பண்பினனே   
4813
வாட்டமெல் லாந்தவிர்ந் தேன்அருட் பேரொளி வாய்க்கப்பெற்றேன் 
கூட்டமெல் லாம்புகழ் அம்பல வாணரைக் கூடப்பெற்றேன் 
தேட்டமெல் லாம்வல்ல சித்திபெற் றேன்இச் செகதலத்தே 
ஆட்டமெல் லாம்விளை யாடுகின் றேன்எனக் கார்சரியே   
4814
நான்செய்த புண்ணியம் யார்செய் தனர்இந்த நானிலத்தே 
வான்செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்துகண்டேன் 
ஊன்செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக் 
கோன்செய வேபெற்றுக் கொண்டேன்உண் டேன்அருட் கோன்அமுதே   
4815
எனையான் மதித்துப் புகல்கின்ற தன்றிஃ தெந்தைபிரான் 
தனையான் மதித்திங்குப் பெற்றநல் வாழ்வது சாற்றுகின்றேன் 
வினையான் மெலிந்த மெலிவைஎல் லாம்விரைந் தேதவிர்த்துத் 
தனையான் புணர்ந்திடச் சாகா வரத்தையும் தந்தனனே