4821
ஈனமெலாம் தீர்ந்தனவே இன்பமெலாம் எய்தினவே 
ஊனமெலாம் கைவிட் டொழிந்தனவே - ஞானமுளோர் 
போற்றும்சிற் றம்பலத்தும் பொன்னம்ப லத்துநடம் 
போற்றும் படிப்பெற்ற போது   
4822
உள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே 
வள்ளற் பெருஞ்சோதி வாய்த்தனவே - கள்ளக் 
கருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன் 
பொருத்தமுற்றென் உள்ளமர்ந்த போது  
4823
ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க 
ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப் 
பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும் 
அருட்பெருஞ் சோதி அது   
4824
எல்லாம் செயவல்லான் எந்தையருள் அம்பலவன் 
நல்லான் எனக்குமிக நன்களித்தான் - எல்லாரும் 
கண்டுவியக் கின்றார் கருணைத் திருவமுதம் 
உண்டுவியக் கின்றேன் உவந்து  
4825
ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டுநிற்கத் 
தேசார் ஒளியால் சிறியேனை - வாசாம 
கோசரத்தின் ஏற்றிக் கொடுத்தான் அருளமுதம் 
ஈசனத்தன் அம்பலவ னே