4826
ஐயனெனக் கீந்த அதிசயத்தை என்புகல்வேன் 
பொய்யடியேன் குற்றம் பொறுத்தருளி - வையத் 
தழியாமல் ஓங்கும் அருள்வடிவம் நான்ஓர் 
மொழிஆடு தற்கு முனம்   
4827
ஒப்புயர்வொன் றில்லா ஒருவன் அருட்சோதி 
அப்பனெலாம் வல்லதிரு அம்பலத்தான் - இப்புவியில் 
வந்தான் இரவி வருதற்கு முன்கருணை 
தந்தானென் னுட்கலந்தான் தான்   
4828
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் 
சாதல் ஒழித்தென்னைத் தானாக்கிப் - பூதலத்தில் 
ஐந்தொழில்செய் என்றே அருட்சோதிக் கோலளித்தான் 
வெந்தொழில்போய் நீங்க விரைந்து   
4829
ஒளவியந்தீர் உள்ளத் தறிஞரெலாம் கண்டுவக்கச் 
செவ்வியசன் மார்க்கம் சிறந்தோங்க - ஒவ்வி 
விரைந்துவந்தென் உட்கலந்து மெய்யேமெய் யாக 
நிரந்தொன்றாய் நின்றான் நிலத்து 
4830
சோதிப் பிழம்பே சுகவடிவே மெய்ஞ்ஞான 
நீதிப் பொதுவே நிறைநிதியே - சோதிக் 
கடவுளே மாயைஇரு கன்மமிருள் எல்லாம் 
விடவுளே நின்று விளங்கு