4831
துன்பமெலாம் தீர்ந்த சுகமெல்லாம் கைதந்த 
அன்பரெலாம் போற்ற அருள்நடஞ்செய் - இன்பன் 
அருட்பெருஞ்சிற் சோதிதிரு அம்பலத்தான் வேதப் 
பொருட்பெருஞ்சித் தென்னுட் புகுந்து  
4832
தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே 
ஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் - ஏக்கமெலாம் 
நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம் 
தாங்கினேன் சத்தியமாத் தான்   
4833
துன்பம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே 
அன்பகத்தில் வாழும்சிற் றம்பலத்தான் - இன்புருவம் 
தாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்றொளியால் 
ஓங்கினேன் உண்மை உரை   
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 தத்துவ வெற்றி 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4834
திருவளர்பே ரருளுடையான் சிற்சபையான் எல்லாம் 

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன்எல்லாம் உடையான் 
உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய் 

ஓங்கும் அருட்பெருஞ்ஸோதி ஒருவனுண்டே அவன்றான் 
பெருமையினால் எனையீன்றான் நான்ஒருவன் தானே 

பிள்ளைஅவன் பிள்ளைஎனப் பெரியர்எலாம் அறிவார் 
இருமையுறு தத்துவர்காள் என்னைஅறி யீரோ 

ஈங்குமது துள்ளல்எலாம் ஏதும்நட வாதே   
4835
மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான் 

மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய் 
இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய் 

இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ 
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம் 

சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே 
நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய் 

ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே