4836
பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே 

பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம் 
கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது 

குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது 
என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ 

இம்மெனும்முன் அடக்கிடுவேன் என்னைஅறி யாயோ 
பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும் 

பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே  
4837
விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே 

விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம் 
புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப் 

புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே 
தெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ 

சிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய் 
பரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ் 

பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே   
4838
பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே 

பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச் 
சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித் 

தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே() 
ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான் 

அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை 
பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம் 

பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே  
 () எனவே - முதற்பதிப்பு, பொ சு, பி இரா   
4839
மயங்குபுத்தி எனும்உலக வழக்காளிப் பயலே 

வழிதுறையீ தென்றறியாய் வகைசிறிதும் அறியாய் 
உயங்கிவிசா ரித்திடவே ஓடுகின்றாய் உணரும் 

உளவறியாய் வீணுழைப்பிங் குழைப்பதில்என் பயனோ 
வயங்குமனம் அடங்கியவா றடங்குகநீ இலையேல் 

மடித்திடுவேன் கணத்தில்உனை வாய்மைஇது கண்டாய் 
இயங்கஎன்னை அறியாயோ யார்எனஎண் ணினையோ 

எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே   
4840
கலையறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே 

கால்அறியாய் தலைஅறியாய் காண்பனகண் டறியாய் 
நிலையறியாய் ஒன்றைஒன்றா நிச்சயித்திவ் வுலகை 

நெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇங் குறுவாய் 
அலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ 

அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான் 
அலைவறிவாய் என்றனைநீ அறியாயோ நான்தான் 

ஆண்டவன்தன் தாண்டவங்கண் டமர்ந்தபிள்ளை காணே