4841
அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே 

அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய் 
செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து 

திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது 
இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே 

இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன் 
சுகங்காண என்றனைநீ அறியாயோ நான்தான் 

சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே  
4842
மான்எனும்ஓர் சகச்சாலச் சிறுக்கிஇது கேள்உன் 

வஞ்சகக்கூத் தெல்லாம்ஓர் மூட்டைஎனக் கட்டி 
ஈனம்உற நின்தலைமேல் ஏற்றெடுத்துக் கொண்டுன் 

ஏவல்புரி பெண்களொடே இவ்விடம்விட் டேகிக் 
கானடைந்து கருத்தடங்கிப் பிழைத்திடுநீ இலையேல் 

கணத்தில்உனை மாய்ப்பேன்உன் கணத்தினொடுங் கண்டாய் 
ஏன்எனைநீ அறியாயோ சிற்சபையில் நடஞ்செய் 

இறைவன்அருட் பெருஞ்ஸோதிக் கினியபிள்ளை நானே   
4843
மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன் 

மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக் கொண்டுன் 
சாயைஎனும் பெண்இனத்தார் தலைமேலும் உனது 

தலைமேலும் சுமந்துகொண்டோ ர் சந்துவழி பார்த்தே 
பேய்எனக்காட் டிடைஓடிப் பிழைத்திடுநீ இலையேல் 

பேசுமுன்னே மாய்த்திடுவேன் பின்னும்முன்னும் பாரேன் 
ஆய்எனைநீ அறியாயோ எல்லாஞ்செய் வல்லார் 

அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே  
4844
மாமாயை எனும்பெரிய வஞ்சகநீ இதுகேள் 

வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே 
போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு 

போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல் 
சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான் 

சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ 
ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார் 

அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே  
4845
கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே 

கங்குகரை காணாத கடல்போலே வினைகள் 
நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி 

நடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது 
என்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால் 

இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல் 
இன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ 

எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே