4846
எத்துணையும் காட்டாத ஆணவம்என் றிடும்ஓர் 

இருட்டறைக்கோர் அதிகாரக் குருட்டுமுடப் பயலே 
இத்தனைநாள் பிடித்ததுனைக் கண்டுதுரத் திடவே 

இன்னும்அரைக் கணந்தரியேன் இக்கணத்தே நினது 
பொத்தியசுற் றத்துடனே போய்விடுதி இலையேல் 

பூரணமெய் அருள்ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே 
சத்தியஞ்சொன் னேன்எனைநீ அறியாயோ ஞான 

சபைத்தலைவன் தருதலைமைத் தனிப்பிள்ளை நானே  
4847
பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான் 

பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி 
ஒருஞானத் திருவமுதுண் டோ ங்குகின்றேன் இனிநின் 

உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன் 
அருளாய ஸோதிஎனக் குபகரிக்கின் றதுநீ 

அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க 
தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ 

சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே   
4848
பேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள் 

பின்முன்அறி யாதெனைநீ என்முன்மறைக் காதே 
வேசறமா மலஇரவு முழுதும்விடிந் ததுகாண் 

வீசும்அருட் பெருஞ்ஸோதி விளங்குகின்ற தறிநீ 
ஏசுறுநின் செயல்அனைத்தும் என்னளவில் நடவா 

திதைஅறிந்து விரைந்தெனைவிட் டேகுகஇக் கணத்தே 
மாசறும்என் சரிதம்ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம் 

வல்லஒரு சித்தருக்கே நல்லபிள்ளை நானே   
4849
தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள் 

துணிந்துனது சுற்றமொடு சொல்லும்அரைக் கணத்தே 
தாக்கு()பெருங் காட்டகத்தே ஏகுகநீ இருந்தால் 

தப்பாதுன் தலைபோகும் சத்தியம்ஈ தறிவாய் 
ஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன் 

இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே 
போக்கில்விரைந் தோடுகநீ பொற்சபைசிற் சபைவாழ் 

பூரணர்க்கிங் கன்பான பொருளன்என அறிந்தே  
4850
பயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள் 

பற்றறஎன் தனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய் 
தயவின்உரைத் தேன்இன்னும் இருத்திஎனில் உனது 

தன்றலைக்குத் தீம்புவரும் தலைமட்டோ நினது 
செயலுறும்உள் உடம்பழியும் சுற்றமெலாம் இறக்கும் 

தீர்ந்ததினி இல்லைஎன்றே திருவார்த்தை பிறக்கும் 
அயலிடைநேர்ந் தோடுகநீ என்னைஅறி யாயோ 

அம்பலத்தென் அப்பன்அருள் நம்புபிள்ளை நானே