4856
அன்புடை மகனே மெய்யருள் திருவை 

அண்டர்கள் வியப்புற நினக்கே 
இன்புடை உரிமை மணம்புரி விப்பாம் 

இரண்டரைக் கடிகையில் விரைந்தே 
துன்புடை யவைகள் முழுவதும் தவிர்ந்தே 

தூய்மைசேர் நன்மணக் கோலம் 
பொன்புடை விளங்கப் புனைந்துகொள் என்றார் 

பொதுநடம் புரிகின்றார் தாமே  
4857
ஈதுகேள் மகனே மெய்யருள் திருவை 

இரண்டரைக் கடிகையில் நினக்கே 
ஊதியம் பெறவே மணம்புரி விப்பாம் 

உண்மைஈ தாதலால் இனிவீண் 
போதுபோக் காமல் மங்கலக் கோலம் 

புனைந்துளம் மகிழ்கநீ என்றார் 
தீதுதீர்த் தென்னை இளந்தையில் தானே 

தெருட்டிய சிற்சபை யவரே   
4858
விரைந்துகேள் மகனே உலகெலாம் களிக்க 

மெய்யருள் திருவினை நினக்கே 
வரைந்துநன் மணஞ்செய் தொருபெரு நிலையில் 

வைத்துவாழ் விக்கின்றோம் அதனால் 
இரைந்துளம் கவலேல் இரண்டரைக் கடிகை 

எல்லையுள் எழில்மணக் கோலம் 
நிரைந்துறப் புனைதி என்றுவாய் மலர்ந்தார் 

நிருத்தஞ்செய் ஒருத்தர்உள் உவந்தே  
4859
களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக் 

கடிகைஓர் இரண்டரை அதனில் 
ஒளிப்பிலா துலகம் முழுவதும் அறிய 

உனக்குநன் மணம்புரி விப்பாம் 
அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம் 

அணிபெறப் புனைகநீ விரைந்தே 
வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில் 

விளங்குமெய்ப் பொருள்இறை யவரே  
4860
கலங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவைக் 

களிப்பொடு மணம்புரி விப்பாம் 
விலங்கிடேல் வீணில் போதுபோக் காமல் 

விரைந்துநன் மங்கலக் கோலம் 
நலங்கொளப் புனைந்து மகிழ்கஇவ் வுலகர் 

நவிலும்அவ் வுலகவர் பிறரும் 
இலங்கநின் மணமே ஏத்துவர் என்றார் 

இயலுறு சிற்சபை யவரே