4861
ஐயுறேல் இதுநம் ஆணைநம் மகனே 

அருள்ஒளித் திருவைநின் தனக்கே 
மெய்யுறு மகிழ்வால் மணம்புரி விப்பாம் 

விரைந்திரண் டரைக்கடி கையிலே 
கையற வனைத்தும் தவிர்ந்துநீ மிகவும் 

களிப்பொடு மங்கலக் கோலம் 
வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக 

என்றனர் மன்றிறை யவரே   
4862
தூங்கலை மகனே எழுகநீ விரைந்தே 

தூயநீர் ஆடுக துணிந்தே 
பாங்குற ஓங்கு மங்கலக் கோலம் 

பண்பொடு புனைந்துகொள் கடிகை 
ஈங்கிரண் டரையில் அருள்ஒளித் திருவை 

எழில்உற மணம்புரி விப்பாம் 
ஏங்கலை இதுநம் ஆணைகாண் என்றார் 

இயன்மணி மன்றிறை யவரே   
4863
மயங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவை 

மணம்புரி விக்கின்றாம் இதுவே 
வயங்குநல் தருணக் காலைகாண் நீநன் 

மங்கலக் கோலமே விளங்க 
இயங்கொளப் புனைதி இரண்டரைக் கடிகை 

எல்லையுள் என்றுவாய் மலர்ந்தார் 
சயங்கொள எனக்கே தண்ணமு தளித்த 

தந்தையார் சிற்சபை யவரே   
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 அடைக்கலம் புகுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4864
எண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித் 
தண்ணார் அமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே 
கண்ணார் ஒளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என் 
அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே   
4865
திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப் 
பரைசேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழந்தந்தே 
கரைசேர் இன்பக் காட்சிஎலாம் காட்டிக் கொடுத்தே எனையாண்ட 
அரைசே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே