4866
தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர் 
ஊனே புகுந்த ஒளியேமெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம் 
வானே என்னைத் தானாக்கு வானே கோனே எல்லாம்வல் 
லானே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே  
4867
கடையேன் உள்ளக் கவலைஎலாம் கழற்றிக் கருணை அமுதளித்தென் 
புடையே அகத்தும் புறத்தும்அகப் புறத்தும் விளங்கும் புண்ணியனே 
தடையே தவிர்க்கும் கனகசபைத் தலைவா ஞான சபாபதியே 
அடையேன் உலகைஉனை அடைந்தேன் அடியேன்உன்றன் அடைக்கலமே   
4868
இகத்தும் பரத்தும் பெறும்பலன்கள் எல்லாம் பெறுவித் திம்மையிலே 
முகத்தும் உளத்தும் களிதுளும்ப மூவா இன்ப நிலைஅமர்த்திச் 
சகத்துள் ளவர்கள் மிகத்துதிப்பத் தக்கோன் எனவைத் தென்னுடைய 
அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே  
4869
நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று 
வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப் 
பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை 
ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே   
4870
பாடுஞ் சிறியேன் பாட்டனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக் 
கோடு மனப்பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்றொழித்து 
நீடும் உலகில் அழியாத நிலைமேல் எனைவைத் தென்னுளத்தே 
ஆடும் கருணைப் பெருவாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே