4876
இறைவன்வரு தருணம்இதே இரண்டிலைஅஞ் சலை நீ 

எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப 
நிறைமொழிகொண் டறைகஇது பழுதுவரா திறையும் 

நீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற 
முறைமொழிஎன் னுடையவன்தான் மொழிந்தமொழி எனக்கோர் 

மொழிஇலைஎன் உடலாவி முதல்அனைத்தும் தானே 
பொறையுறக்கொண் டருட்ஸோதி தன்வடிவும் உயிரும் 

பொருளும்அளித் தெனைத்தானாப் புணர்த்தியது காணே  
4877
என்இறைவன் வருதருணம் இதுகண்டாய் இதற்கோர் 

எட்டுணையும் ஐயமிலை என்னுள்இருந் தெனக்கே 
தன்னருள்தௌ; அமுதளிக்கும் தலைவன்மொழி இதுதான் 

சத்தியம்சத் தியம்நெஞ்சே சற்றும்மயக் கடையேல் 
மன்னுலகத் துயிர்கள்எலாம் களித்துவியந் திடவே 

வகுத்துரைத்துத் தெரிந்திடுக வருநாள்உன் வசத்தால் 
உன்னிஉரைத் திடமுடியா தாதலினால் இன்றே 

உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே  
4878
எல்லாஞ்செய் வல்லதனிப் பெருந்தலைமைச் சித்தன் 

எனமறைஆ கமம்புகலும் என்இறைவன் மகிழ்ந்தே 
நல்லார்கள் வியக்கஎனக் கிசைத்தபடி இங்கே 

நான்உனக்கு மொழிகின்றேன் நன்றறிவாய் மனனே 
பல்லாரும் களிப்படையப் பகல்இரவும் தோற்றாப் 

பண்பின்அருட் பெருஞ்ஸோதி நண்பினொடு நமக்கே 
எல்லாநன் மைகளும்உற வருதருணம் இதுவே 

இவ்வுலகம் உணர்ந்திடநீ இசைத்திடுக விரைந்தே  
4879
கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும் 

கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான் 
தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது 

சார்பின்அருட் பெருஞ்ஸோதி தழைத்துமிக விளங்கும் 
திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான் 

திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே 
வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல் 

வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே   
4880
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ 

துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய 
வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று 

வகுத்துரைத்துத் தெரித்திடுக மயக்கம்அணுத் துணையும் 
கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஸோதிப் பெருமான் 

குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய் 
நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல் 

நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே