4881
மாயைவினை ஆணவமா மலங்களெலாம் தவிர்த்து 

வாழ்வளிக்கும் பெருங்கருணை வள்ளல்வரு தருணம் 
மேயதிது வாம்இதற்கோர் ஐயம்இலை இங்கே 

விரைந்துலகம் அறிந்திடவே விளம்புகநீ மனனே 
நாயகன்றன் குறிப்பிதுஎன் குறிப்பெனநீ நினையேல் 

நாளைக்கே விரித்துரைப்பேம் எனமதித்துத் தாழ்க்கேல் 
தூயதிரு அருட்ஸோதித் திருநடங்காண் கின்ற 

தூயதிரு நாள்வருநாள் தொடங்கிஒழி யாவே  
4882
மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான் 

வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல் 
நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன் 

நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான் 
கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள் 

குறிப்பெனக்கொண் டுலகமெலாம் குதுகலிக்க விரைந்தே 
சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல் 

தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே   
4883
ஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன் 

இப்பெரிய வார்த்தைதனக் கியானார்என் இறைவன் 
ஓதுகநீ என்றபடி ஓதுகின்றேன் மனனே 

உள்ளபடி சத்தியம்ஈ துணர்ந்திடுக நமது 
தீதுமுழு தும்தவிர்த்தே சித்திஎலாம் அளிக்கத் 

திருவருளாம் பெருஞ்ஸோதி அப்பன்வரு தருணம் 
ஈதிதுவே என்றுலகம் அறியவிரைந் துரைப்பாய் 

எல்லாரும் களிப்படைந்துள் இசைந்தேத்தி யிடவே  
4884
தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான 

சபைத்தலைவன் என்உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக் 
கனித்தஉளத் தொடும்உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர் 

கதைஎனநீ நினையேல்மெய்க் கருத்துரைஎன் றறிக 
இனித்தஅருட் பெருஞ்சோதி ஆணைஎல்லாம் உடைய 

இறைவன்வரு தருணம்இது சத்தியமாம் இதனைப் 
பனித்தவுல கவர்அறிந்தே உய்யும்வகை இன்னே 

பகர்ந்திடுக நாளைஅருட் பரமசுகச் சாறே   
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 திருப்பள்ளி எழுச்சி 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4885
பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம் 

பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும் 
தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம் 

சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே 
முழுதும்ஆ னான்என ஆகம வேத 

முறைகளெ லாம்மொழி கின்றமுன் னவனே 
எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி 

என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே