4886
துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம் 

தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான் 
சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா 

சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த 
நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் 

நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார் 
எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி 

என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே  
4887
நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண 

நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற 
அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய் 

அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு 
புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப் 

போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார் 
இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி 

என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே   
4888
கல்லாய மனங்களும் கரையப்பொன் னொளிதான் 

கண்டது கங்குலும் விண்டது தொண்டர் 
பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப் 

பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய் 
நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும் 

நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே 
எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி 

என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே  
4889
புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப் 

பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர் 
சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார் 

சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம் 
மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார் 

வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார் 
என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி 

என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே  
4890
ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே 

ஊதின சின்னங்கள் ஊதின சங்கம் 
பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப் 

பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார் 
அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி 

அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே 
இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி 

என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே