4906
சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது 
சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது 
கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது 
கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது  அற்புதம்   
4907
செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது 
சிவநெறி ஒன்றேஎங் கும்தலை எடுத்தது 
இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது 
இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது  அற்புதம்   
4908
ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது 
அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது 
ஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது 
என்னருட் சோதிஎன் உள்ளத்தில் ஆர்ந்தது அற்புதம்   
4909
சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன் 
சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன் 
நித்திய ஞான நிறையமு துண்டனன் 
நிந்தை உலகியற் சந்தையை விண்டனன்  அற்புதம்  
4910
வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர் 
வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர் 
தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர் 
சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர்  அற்புதம்