4951
ஆடேடி பந்து ஆடேடி பந்து 
ஆடேடி பந்து ஆடேடி பந்து  

கண்ணிகள் 
4952
வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும் 

மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன் 
சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால் 

தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி 
ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும் 

உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை 
ஆழி கரத்தணிந் தாடேடி பந்து 

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி  
4953
இசையாமல் போனவர் எல்லாரும் நாண 

இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் 
வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி 

வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு 
நசையாதே என்னுடை நண்பது வேண்டில் 

நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில் 
அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து 

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி  
4954
இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண 

இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் 
தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற 

திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி 
துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே 

சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவள் ஆகி 
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து 

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி  
4955
சதுமறை() ஆகம சாத்திரம் எல்லாம் 

சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ 
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா 

வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர் 
பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும் 

பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான் 
அதுஇது என்னாமல் ஆடேடி பந்து 

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி  
 () சதுர்மறை - பொ சு, ச மு க பதிப்புகள்