4956
தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் 

தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே 
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் 

என்தோழி வாழிநீ என்னொடு கூடி 
துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச் 

சோதிஎன் றோதிய வீதியை விட்டே 
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து 

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி  
4957
வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன் 

விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம் 
எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி 

என்மொழி சத்தியம் என்னோடும் கூடி 
இங்கே களிப்பது நன்றிந்த உலகோ 

ஏதக் குழியில் இழுக்கும் அதனால் 
அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து 
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி  
4958
சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன் 

செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன் 
உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில் 

ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன் 
தவமே புரிகின்றார் எல்லாரும் காணத் 

தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி 
அவமேபோ காதென்னோ டாடேடி பந்து 

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி  
4959
துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச் 

சூழலில் உண்டது சொல்லள வன்றே 
எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன் 

இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் 
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே 

வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே 
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து 

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி  
4960
ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன் 

என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி 
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும் 

கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி 
ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ 

ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும் 
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து 

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி