4971
தனிஎன் மேல்நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லை யே 
தகும்ஐந் தொழிலும் வேண்டுந் தோறும் தருதல் வல்லை யே 
வினவும் எனக்கென் உயிரைப் பார்க்க மிகவும் நல்லை யே 
மிகவும் நான்செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லை யே எனக்கும் உனக்கும்  
 தனியன் - பி இரா, ச மு க 
4972
என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகு தே 
என்னை விழுங்கி எங்கும் இன்ப வெள்ளம் பெருகு தே 
உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்கு தே 
உன்னோ டென்னை வேறென் றெண்ணில் மிகவும் பனிக்கு தே எனக்கும் உனக்கும்  
4973
உன்பேர் அருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே 
உண்டு பசிதீர்ந் தாற்போல் காதல் மிகவும் தடிக்கு தே 
அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற் றே 
அன்போர் அணுவும் இல்லா எனக்கிங் கருளல் ஆயிற் றே எனக்கும் உனக்கும்  
4974
நினைக்க நினைக்கத் தித்திப் பெனது நினைவில் கொடுக்கு தே 
நின்பால் அன்றிப் பிறர்பால் செல்ல நெஞ்சம் நடுக்கு தே 
எனைத்துன் பொழித்தாட் கொண்ட நின்னை அன்னை என்ப னோ 
எந்தாய் அன்பி லேன்நின் னடிக்கு முன்னை அன்ப னோ எனக்கும் உனக்கும்  
4975
உன்னை மறக்கில் எந்தாய் உயிர்என் உடம்பில் வாழு மோ 
உன்பால் அன்றிப் பிறர்பால் என்றன் உள்ளம் சூழு மோ 
என்னைக் கொடுக்க வாங்கிக் கொண்ட தென்ன கருதி யோ 
எந்தாய் நின்னைக் கொடுக்க என்பால் இன்று வருதி யோ எனக்கும் உனக்கும்