4981
ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றி யே 
இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி யே 
மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னை யோ 
மதியி லேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னை யோ எனக்கும் உனக்கும்  
4982
இடமும் வலமும் இதுவென் றறியா திருந்த என்னை யே 
எல்லாம் அறிவித் தருள்செய் கருணை என்னை என்னை யே 
நடமும் நடஞ்செய் இடமும் எனக்கு நன்று காட்டி யே 
நாயி னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே எனக்கும் உனக்கும்  
4983
விதுவும் கதிரும் இதுவென் றறியும் விளக்கம் இன்றி யே 
விழித்து மயங்கி னேன்பால் பெரிய கருணை ஒன்றி யே 
அதுவும் அதுவும் இதுவென் றெனக்குள் அறியக் காட்டி யே 
அடிய னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே எனக்கும் உனக்கும்  
4984
இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே 
இரவும் பகலும் மயங்கி னேனை இனிது நண்ணி யே 
அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டி யே 
அன்பால் என்னை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே எனக்கும் உனக்கும்  
4985
அண்டத் தகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லு தே 
அவனே எல்லாம் வல்லான் என்று மறைகள் சொல்லு தே 
பிண்டத் தகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதி யே 
பேயேன் அளவில் விளங்கு கின்ற தென்ன நீதி யே எனக்கும் உனக்கும்