4991
என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே 
என்ன தவஞ்செய் தேன்முன் அயனும் அரியும் நாண வே 
புன்கண் ஒழித்துத் தௌ;ளார் அமுதம் புகட்டி என்னை யே 
பொருளாய் எண்ணி வளர்க்கின் றாய்நீ எனக்கோர் அன்னை யே எனக்கும் உனக்கும்  
4992
அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே 
அமுதும் அளித்தாய் யார்செய் வார்கள் இந்த நன்றி யே 
செறிவி லாத பொறியும் மனமும் செறிந்து நிற்க வே 
செய்தாய் மேலும் தெரித்தாய் சாகாக் கல்வி கற்க வே எனக்கும் உனக்கும்  
4993
ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே 
யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலை யே 
திருநாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையு மே 
சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையு மே எனக்கும் உனக்கும்  
4994
அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும்அறிய வேண்டி யே 
ஆசைப் பட்ட தறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டி யே 
பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும்பிண்டம் தன்னை யே 
பிரியும் வகையும் பிரியா வகையும்தெரித்தாய் பின்னை யே எனக்கும் உனக்கும்  
4995
வேதா கமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன் றாக வே 
விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போக வே 
பூதா திகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்று மே 
பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்று மே எனக்கும் உனக்கும்