4996
வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய்ம ணக்கு தே 
வஞ்ச வினைகள் எனைவிட் டோ டித் தலைவ ணக்கு தே 
எள்ளா துனது புகழைக் கேட்கச் செவிந யக்கு தே 
எந்தாய் தயவை எண்ணுந் தோறும் உளம்வி யக்கு தே எனக்கும் உனக்கும்  
4997
இறைவா நின்னைக் கனவி லேனும் யான்ம றப்ப னோ 
எந்தாய் உலகத் தவர்கள் போல்நான் இனி இறப்ப னோ 
மறைவா சகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியி லே 
வாய்க்கக் கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியி லே எனக்கும் உனக்கும்  
4998
தலைவா எனக்குக் கருணை அமுதம் தரஇத் தலத்தி லே 
தவம்செய் தேன்அத் தவமும் உன்றன் அருள்வ லத்தி லே 
அலைவா ரிதியில் துரும்பு போல அயனும் மாலு மே 
அலைய எனக்கே அளிக்கின் றாய்நீ மேலும் மேலு மே எனக்கும் உனக்கும்  
4999
உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்ன வே 
உடம்பு பூரிக் கின்ற தொளிர்பொன் மலைய தென்ன வே 
தடையா தினிஉள் மூல மலத்தின் தடையும் போயிற் றே 
சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமம தாயிற் றே எனக்கும் உனக்கும்  
5000
மயங்குந் தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கி யே 
மகிழ்விக் கின்றாய் ஒருகால் ஊன்றி ஒருகால் தூக்கி யே 
உயங்கு மலங்கள் ஐந்தும் பசையற் றொழிந்து வெந்த தே 
உன்பே ரருட்பொற் சோதி வாய்க்குந் தருணம் வந்த தே எனக்கும் உனக்கும்