5001
எனக்கும் நின்னைப் போல நுதற்கண் ஈந்துமதனை யே 
எரிப்பித் தாய்பின் எழுப்பிக் கொடுத்தாய் அருவ மதனை யே 
சினக்குங் கூற்றை உதைப்பித் தொழித்துச் சிதைவு மாற்றி யே 
தேவர் கற்பம் பலவும் காணச் செய்தாய் போற்றி யே  எனக்கும் உனக்கும்   
5002
கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்று மே 
கருத்தில் உளது வேறோர் விடயம் காணேன் என்று மே 
உள்ள துரைக்கின் றேன்நின் அடிமேல் ஆணை முன்னை யே 
உள்ளே விளங்கிக் காண்கின் றாய்க்கிங் கொளிப்ப தென்னை யே  எனக்கும் உனக்கும்    
5003
என்னை அடிமை கொண்டாய் நானும் நினக்கு நல்ல னோ 
எல்லாம் வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்ல னோ 
முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டி யே 
மூவர்க் கரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டி யே  எனக்கும் உனக்கும்   
5004
சோதி மலையில் கண்டேன் நின்னைக் கண்க ளிக்க வே 
துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிம ளிக்க வே 
ஓதி உணர்தற் கரிய பெரிய உணர்வை நண்ணி யே 
ஓதா தனைத்தும்உணர்கின்றேன்நின் அருளை எண்ணி யே  எனக்கும் உனக்கும்   
5005
ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே 
ஏற்றிக் களிக்க வைத்தாய் அதன்மேல் இலங்கு குன்றி லே 
வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசு மே 
மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப்பொற் காசு மே  எனக்கும் உனக்கும்